காதலி பேச மறுத்ததால் வேதனை: தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

காதலி பேச மறுத்ததால் வேதனை அடைந்த தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-05-13 23:00 GMT

சேலம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது25). தையல் தொழிலாளி. இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு சேலம் வந்தார். சேலம் வின்சென்ட் பகுதியில் கண்ணன் என்பவர் நடத்தி வந்த தையல் கடையில் மாரிமுத்து வேலை செய்து வந்தார். கடையின் மேல்மாடியில் அங்கு வேலை பார்க்கும் கோவிந்தனும், மாரிமுத்துவும் தங்கி இருந்தனர்.

நேற்று காலை கோவிந்தன் எழுந்தபோது, மாரிமுத்து சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடை உரிமையாளருக்கும், அஸ்தம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

காதலி பேச மறுப்பு

போலீசார் விரைந்து வந்து, மாரிமுத்துவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்து அடிக்கடி செல்போனில் உறவுப்பெண் ஒருவருடன் பேசி வருவது வழக்கம் என்றும், அவரை காதலித்து வருவதாக சக நண்பர்களிடம் கூறி வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு காதலிக்கு அவர் செல்போனில் அழைத்து பேச முயற்சித்துள்ளார். ஆனால், அப்பெண் பேச மறுத்ததாக சொல்லப்படுகிறது. அதையும் நண்பர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுக்கொண்டு யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்