தட்டார்மடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு

தட்டார்மடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 8½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-05-13 22:45 GMT

தட்டார்மடம்,

தட்டார்மடம் அருகே உள்ள போலையர்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 57) விவசாயி. இவருடைய மனைவி, வெளிநாட்டில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, ஈரோட்டில் வசித்து வருகிறார். மகன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

போலையர்புரத்தில் கிறிஸ்தவ ஆலய விழா நடைபெற உள்ளது. எனவே ஜெயகுமார் தன்னுடைய மகளை அழைப்பதற்காக, கடந்த 9–ந்தேதி தன்னுடைய மகனுடன் காரில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

8½ பவுன் நகைகள் திருட்டு

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஜெயகுமாரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, வீட்டில் பீரோவின் மீது வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து, அதில் இருந்த 8½ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். நேற்று முன்தினம் மாலையில் ஜெயகுமார் தன்னுடைய மகனுடன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். கொள்ளை நடந்த வீட்டை சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்