உளுந்தூர்பேட்டை அருகே பச்சைவாழியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

உளுந்தூர்பேட்டை அருகே பச்சைவாழியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2017-05-13 22:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே பு.கொனலவாடி கிராமத்தில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் மற்றும் தீ மிதி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 11–ந்தேதி கோவில் வளாகத்தில் சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள வாமுனீஸ்வரர்க்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து ஏற்கனவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் விநாயகர், முருகன், பச்சைவாழியம்மன், மன்னாத ஈஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தீ மிதி திருவிழா

பின்னர் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் அசம்பாவிதசம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க உளுந்தூர்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்