ஒரே இடத்தில் நிறுத்தி ஆய்வு: 14 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

ஒரே இடத்தில் நிறுத்தி சோதனை நடத்தப்பட்டு, குறைபாடுகள் கண்டறியப்பட்ட

Update: 2017-05-13 23:00 GMT

சேலம்,

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதையொட்டி, தனியார் பள்ளிகளில் மாணவ–மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை சேலம் மண்டல துணை போக்குவரத்து ஆணையாளர் பொன்.செந்தில்நாதன் மேற்பார்வையில் சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 46 தனியார் பள்ளிகளை சேர்ந்த 186 வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சேலம் 3 ரோடு அருகே உள்ள ஜவகர்மில் திடலில் அனைத்து பள்ளி வாகனங்களும், அதன் டிரைவர்களும் வரவழைக்கப்பட்டு நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஆய்வு நடத்தப்பட்டது.

சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் ஆய்வை நடத்தினர்.

தகுதிச்சான்று ரத்து

பள்ளி வாகனங்களில் அவசரவழி கதவு சரியாக செயல்படுகிறதா?, பிரேக் சரியாக பிடிக்கிறதா?, பஸ்சின் பிளாட்பாரம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளதா?, முதல் உதவி பெட்டியில் தேவையான மருந்து உள்ளதா?, தீயணைப்பு கருவி காலாவதியாகி உள்ளதா?, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பன போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளின் 186 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவற்றில் 14 வாகனங்களுக்கு பெரிய அளவிலான குறைபாடு கண்டறியப்பட்டு அவற்றின் தகுதிச்சான்றினை(எப்.சி.) அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் சில வாகனங்களுக்கு சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக பள்ளி வாகன டிரைவர்கள் அனைவரும், ‘‘விபத்து இல்லாமலும், சாலைவிதிகளை கடைப்பிடித்தும் வாகனங்களை ஓட்டுவோம்‘‘ என்ற உறுதிமொழியை ஏற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு இலவச கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாகனத்தில் தீப்பிடித்தால் அதை எப்படி விரைவாக செயல்பட்டு அணைப்பது என சேலம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடாசலம், சிவகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் செய்திகள்