காட்டுமன்னார்கோவிலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

காட்டுமன்னார்கோவிலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-13 23:00 GMT

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை முன்பு கட்சி நிர்வாகிகள், ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் அந்த கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை டாஸ்மாக் கடை முன்பு படுக்க வைத்து மாலை அணிவித்து, அவரை சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர்.

ஆர்ப்பாட்டம்

பின்னர், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஜாகீர்உசேன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோ‌ஷங்களை பொது மக்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் வட்ட செயலாளர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் தேன்மொழி, ஆதிதிராவிட மகாஜன சங்க மாநில செயலாளர் ஜோதிமணி, ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு போராட்டக்காரர்கள், டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்