33 கோவில்களில் திருப்பணி வேலைகள் தொடக்கம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

33 கோவில்களில் திருப்பணி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Update: 2017-05-13 23:00 GMT

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அதில் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு உபயமாக வரப்பெற்ற கால்நடைகளை, அந்தந்த திருக்கோவிலின் உபயோகத்திற்கு போக உபரியாக உள்ள கால்நடைகள், நிதி வசதியில்லாத, ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் கோவில்களின் அர்ச்சகர், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த திட்டத்தின் கீழ் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலுக்கு பக்தர்கள் மூலம் உபயமாக வரப்பெற்ற 27 கால்நடைகள் மற்றும் ராஜபாளையம் மாயூரநாதசாமி திருக்கோவிலுக்கு உபயமாக வரப்பெற்ற 3 கால்நடைகளை அர்ச்சகர், பூசாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–

அன்னதானம்

ஜெயலலிதா இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களையும், திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தினையும் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார். அரசு தற்போது திருக்கோவில்களுக்கு உபயமாக வரப்பெற்ற கால்நடைகளை திருக்கோவில் உபயோகத்திற்கு போக உபரியாக உள்ள கால்நடைகளை துறைக்கட்டுப்பாட்டில் உள்ள நிதிவசதியில்லாத ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோவில்களின் அர்ச்சகர், பூசாரிகளுக்கு வழங்கிடவும், அந்த கால்நடைகளின் மூலம் பெறப்படும் பாலை கோவில்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சேராத திருக்கோவில்கள், நிதிவசதியில்லாத நலிவடைந்த திருக்கோவில்களுக்கு தினசரி பூஜைகள் செய்வதற்கு, பொதுமக்களின் பங்களிப்பு பெறப்பட்டு, தினசரி பூஜைக்கு பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு வரை 23 திருக்கோயில்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2016–2017ம் ஆண்டில் வில்லிபுத்தூர் வட்டம், திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் திருக்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமக்கோவில் பூசாரி நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கிராமக் கோவில் பூசாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பணி

மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 15 திருக்கோவில்களுக்கு ரூ.15 லட்சமும், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் உள்ள 18 திருக்கோவில்களுக்கு ரூ.18 லட்சமும் வழங்கப்பட்டு திருப்பணி செய்வதற்கான ஆக்கப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டி.ராதாகிருஷ்ணன் (விருதுநகர்), வசந்திமுருகேசன் (தென்காசி), ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தக்கார் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்