போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி சாமி சிலையை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் மறியல் சேத்துப்பட்டில் பரபரப்பு

கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவரை மட்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

Update: 2017-05-13 23:00 GMT

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் முகம்மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் கூழ்வார்க்கும் விழா நடந்தது. அப்போது நடந்த ஊர்வலத்தின்போது அதேபகுதியை சேர்ந்த கமல் என்பவர் தரப்பினருக்கும், குமார் என்பவர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இருதரப்பினர் மோதல் தொடர்பாக கமலை (வயது 23) போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதை அறிந்த பழம்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தாமல் ஒரு தரப்பினரை சேர்ந்தவரை மட்டும் அழைத்து சென்று ஒருதலை பட்சமாக விசாரணை நடத்துவதாக கூறி முகம்மாரியம்மன் சாமி சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து சேத்துப்பட்டு–வந்தவாசி சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் இருதரப்பினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இரு தரப்பினரையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். மேலும் விசாரணைக்கு அழைத்து சென்ற கமலை மறியல் நடந்த இடத்துக்கு போலீசார் கொண்டு வந்து விடுவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்