‘காட்பாதர்’ உருவான கதை 3 மர்லன் பிராண்டோ நடிக்க எதிர்ப்பு

காட்பாதர் திரைப்படத்தில் இருந்து இயக்குனர் கப்பல்லோவை விரட்ட பல சதிகள் அரங்கேறின.

Update: 2017-05-13 10:36 GMT
1.திரைப்படத்தில் இடம்பிடித்த திருமண காட்சியில் அல்பாசினோ

2.படத்தில் பூனையுடன் மிரட்டும் காட்பாதர்

ஆனால் அவரோ எதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய வேலைகளை சரிவர செய்துகொண்டிருந்தார். திரைப்படத்திற்காக பல பகுதிகளில் இருந்தும் நிறைய இளைஞர்களை வரவழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி கொண்டிருந்தார். எனினும், இதன்மூலம் நிறைய தொகை செலவழிந்ததே தவிர, ஆரோக்கியமாக எதுவும் நடக்கவில்லை என்று பாராமவுண்ட் நிறுவனத்தினர் குற்றம் சாட்டினர். கப்பல்லோ கதைக்கு பொருத்தமானவர்களை தேடிக்கொண்டிருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தினரோ, நடிகர் தேர்வு என்ற பெயரில் பணத்தை செலவழிப்பதாக குறை கூற ஆரம்பித்தனர். அத்துடன் நடிகர்களில் குறையில்லை, இயக்குனரிடம்தான் குறையுள்ளது என அவரையே குற்றம்சாட்டினார்கள்.

இதுபற்றி கப்பல்லோ தெரிவிக்கையில், ‘காட்பாதர் கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

நான் ‘உலகத்திலேயே மிகச்சிறந்த இரண்டு நடிகர்கள் லாரன்ஸ் ஆலிவரும், மர்லன் பிராண்டோவும்தான். ஆனால், மர்லன் பிராண்டோ இன்னும் இளையவராகவே இருக்கிறார். அவருக்கு வயது 47 தான். அதனால் நாம் ஏன் ஆலிவரை அணுகக்கூடாது’ என்றேன்.

அதற்கு அவர்கள், ‘ஆலிவர் இனியும் நடிப்பதாக இல்லை. அவர் விரைவிலேயே இறந்து விடுவார்’ என்றார்கள்.

‘சரி.. அப்படியென்றால் நாம் ஏன் மர்லன் பிராண்டோவை அணுகக் கூடாது?’ என்றேன்.

பாராமவுண்ட் நிறுவனத்தினருடனான அடுத்த அமர்வில் நான் மர்லன் பிராண்டோவை முன் மொழிந்தேன். ஆனால், அவர்கள் ‘மர்லன் பிராண்டோ இறுதியாக ‘பர்ன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தார். ஒருவேளை அவர் அதில் நடித்திருக்காவிட்டால், படம் சிறப்பாக வந்திருக்கும். அதனால் மர்லன் பிராண்டோவை காட்பாதராக கற்பனை செய்து பார்ப்பதைக்கூட தவிர்த்து விடுங்கள்’ என்றனர்.

அதோடு, இன்னொரு அமர்வுக்கும் என்னை அழைத்திருந்தனர். அதில் பாராமவுண்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இடம் பெற்றிருந்தனர். அவர் களுக்கு மத்தியில் துளி ஆதரவுமின்றி கைகளில் விலங்கிடப்பட்டவனைப்போல என்னை உணர்ந்தேன்.

அவர்களின் தலைவர், ‘இந்த படத்தில் மர்லன் பிராண்டோ நிச்சயமாக இல்லை’ என்று திடமாக சொன்னார்.

அதற்கு நான், ‘என்னை இயக்குனராக நியமித்திருக்கிறீர்கள். ஆனால், என் கருத்தை துளியும் நீங்கள் ஏற்பதில்லை. இப்போது நீங்கள் எனக்கு கட்டளையிடுகிறீர்கள். தயவுகூர்ந்து இந்த ஒன்றிலாவது என் பேச்சைக் கேளுங்கள்’ என்று மன்றாடினேன்.

இறுதியாக அவர்கள் மர்லன் பிராண்டோ படத்தில் இடம்பெற வேண்டுமானால், மூன்று விஷயங்களை உடனடியாக செய்தாக வேண்டுமென்று தெரிவித்தார்கள். முதலாவது.. ‘காட்பாதர்’ படத்தில் நடிப்பதற்கு பிராண்டோவுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படாது. இரண்டு.. அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அது எதற்கு என்றால்.. படப்பிடிப்புக்காக திட்டமிடப்பட்ட செலவுத் தொகை அவரால் விரயமாகுமானால், அதற்கு அவரே முழுப் பொறுப்பு ஏற்று அந்த தொகையைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். மூன்றாவது.. அவர் ஸ்கிரீன் டெஸ்டிற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவர்களின் இந்த நிபந்தனைகளுக்கு நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். மர்லன் பிராண்டோவை எப்படியாவது இதில் நடிக்க வைத்துவிட வேண்டுமென்பதில் நான் உறுதியுடன் இருந்ததால், அவர்கள் முன் வைத்த எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க நான் தயாராக இருந்தேன்.

ஆனால், மனதினுள் ‘எப்படி இதனை சாத்தியப்படுத்தப் போகிறேன்?’ என்று சிந்தித்தபடியே இருந்தேன். மூன்று கோரிக்கைகளில் எனக்கு பெரும் பிரச்சினையாக தெரிந்தது ஸ்கிரீன் டெஸ்ட்தான்.

ஸ்கிரீன் ட்ஸ்ட்-டின் போது...


பிராண்டோவுக்கு போன் செய்து, ‘நாம் காட்பாதர் கதாபாத்திரத்திற்கான ஒத்திகை ஒன்றை நிகழ்த்திப் பார்க்கலாமா?. சிறிய வீடியோ கேமரா ஒன்றில் அதனை பதிவு செய்து கொள்ளலாம். காட்பாதர் கதாபாத்திரத்தை மெருகேற்ற அது பெரிதும் துணை புரியும்’ என்றேன். இதுவொரு ஸ்கிரீன் டெஸ்ட் என்பதை அப்போது அவரிடம் தெரிவிக்கவில்லை. அவரும் உடனடியாக என்னை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

நான் இத்தாலிய மாபியாக்கள் பயன்படுத்தக்கூடிய பல பொருட்களை பிராண்டோவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருந்தேன். அவைகளை பிராண்டோவின் அறையில் பரப்பி வைத்து விட்டு பதற்றத்துடன் காத்திருந்தேன். பிராண்டோ உறக்கத்தில் இருந்து மெல்ல எழுந்து என் அருகே நடந்து வந்தார்.

நான், ‘காலை வணக்கம் பிராண்டோ’ என்றேன்.
அவர் தனது பாணியில், ‘ம்ம்ம்’ என்றுவிட்டு, தனது நாற்காலி யில் அமர்ந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துவிட்டு, மீண்டும் ‘ம்ம்ம்’ என்றார்.

பிறகு, அவர் எழுந்து சென்று தன் தலை கேசத்தை வழித்து சீவினார். அதோடு, தன் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அவர் தன் சட்டை காலரை சுருட்டியபடியே, ‘அவர்களின் சட்டை காலர் எப்போதும் சுருங்கியிருக்கும்’ என்றார். அவர் மெல்ல காட்பாதராக உருமாறிக்கொண்டிருந்தார். தன் மேல் கோட்டை அணிந்துகொண்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார். நாங்கள் அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். எப்படி 47 வயதுடையவரான பிராண்டோவால் காட்பாதராக கச்சிதமாக உருமாற முடிந்திருந்தது என்று வியந்தபடியே அங்கிருந்து கிளம்பினேன்.

நான் நேராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்த சார்லியின் அலுவலகத்திற்கு சென்றேன். அவர்தான் பிராண்டோ, காட்பாதராக நடிக்கக் கூடாது என்பதில் அதிக தீவிரத்துடன் இருந்தார். அதனால், பிராண்டோவின் ஸ்கிரீன் டெஸ்ட் வீடியோவை முதலில் அவருக்குப் போட்டுக் காட்டினேன்.

பிராண்டோவை அந்த வீடியோவில் பார்த்ததும் முதலில், ‘இது அவசியமில்லை..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தவர், வீடியோ டேப் முழுவதும் முடிந்திருந்தபோது, ‘பிராண்டோதான் காட்பாதருக்கான சரியானத் தேர்வு’ என்றார்.

அவருக்கு பிறகு, பாராமவுண்ட் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு அந்த டேப்பை போட்டுக் காண்பித்தேன். அவர்கள் எல்லோரும் பிராண்டோவின் தோற்றத்தால் அசந்து போயிருந்தார்கள். அதனால், எல்லோருமே அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், அவருக்கு சராசரி நடிகருக்கான சம்பளத் தொகை தருவதோடு, எந்த ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தனர். நான் அவர்களை, அதற்கு சம்மதிக்க வைத்தேன்.

அதன் பிறகு அல் பாசினோவை இந்தப் படத்திற்குள் இழுப்பதிலும் அதிக சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. பாராமவுண்ட் நிறுவனத்தினர் அல் பாசினோ, காட்பாதரில் இடம்பெறுவதை துளியும் விரும்பவில்லை. அதனால் அல் பாசினோ வேறொரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிசியாகி விட்டார். பிராண்டோவும் வேறொரு படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

நான் அவ்வப்போது பிரண்டோவை அவரது படப்பிடிப்பு தளத்தில் சென்று சந்தித்து வருவேன். அப்போதுதான், அல் பாசினோ நடித்து வெளியாகியிராத ‘தி பானிக்’ என்ற படத்தின் சில காட்சிகளை பாராமவுண்ட் நிறுவனத்தினர் பார்த்திருந்தனர். அப்படத்தில் அல் பாசினோ சிறப்பாக நடித்திருப்பதாகவும், இனி அவர் காட்பாதரில் நடிப்பதில் தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். ஆனால், அவர் வேறொரு படத்தில் பிசியாக இருந்ததால், என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. மற்றொரு நடிகர், சில மாபியாக்களின் துணை கொண்டு அல் பாசினோவை அவர் நடித்துக்கொண்டிருந்த திரைப்படத்திலிருந்து விலக செய்தார். பின்னர் அந்த பாத்திரத்தை தானே ஏற்றுக்கொண்டார். இதனால் அல் பாசினோ என்னுடன் இணையும் வாய்ப்பு தானாக தேடி வந்தது. எனினும், பல்வேறு பிரச்சினைகளுடன்தான் ‘காட்பாதர்’ முதல் பாகத்தை என்னால் இயக்கி முடிக்க முடிந்தது. திரைப்படத்தில் இருக்கும் ஒரு சில மிரட்டல் காட்சிகள், எனக்கும்.. அல் பாசினோவிற்கும் நேர்ந்தவையே!
அந்த மிரட்டல்களைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
-தொடரும்.

மேலும் செய்திகள்