கப்பலில் கார் பந்தய தடம்

மனிதனின் புதிய புதிய முயற்சிகளுக்கு எல்லையே இல்லை என்பதைத்தான் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் காட்டுகின்றன.

Update: 2017-05-13 10:01 GMT
கடல் நீரில் மிதக்கும் கப்பலில் விமான ஓடுதளத்தை உருவாக்கிச் சாதனை படைத்த மனிதன், இப்போது கப்பலிலேயே பந்தயக் கார் தடத்தையும் உருவாக்கிவிட்டான்.

உலகிலேயே முதல்முறையாக ஓர் உல்லாசக் கப்பலில் இத்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்விஜீயன் குரூஸ் லைன்ஸ்’ என்ற சொகுசுக் கப்பல் நிறுவனம் புதிய கப்பலைத் தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கப்பல் கட்டும் நிறுவனமான மேயர் வெர்ப்ட்டில் இந்த கப்பல் கட்டப்பட்டிருக் கிறது.
சீனாவுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பலுக்கு, ‘நார்வீஜியன் ஜாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து ஷாங்காய் நோக்கி வரும் ஜூன் 27-ம் தேதி இக்கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குகிறது. இதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம்.

இந்தக் கப்பலின் மேல் தளங்களில் இரண்டு அடுக்கு கார் பந்தயத் தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை புகழ்பெற்ற பெராரி கார் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இதில் ஒரே நேரத்தில் 10 பந்தய கார்களை இயக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்