2 பெண்களை கற்பழித்து ஒருவரை கொன்ற வழக்கில் கேட்டரிங் ஊழியர்கள் 2 பேருக்கு தூக்கு தண்டனை தானே கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

2 பெண்களை கற்பழித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேட்டரிங் ஊழியர்கள் 2 பேருக்கு தூக்குதண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

Update: 2017-05-12 22:21 GMT

மும்பை,

2 பெண்களை கற்பழித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேட்டரிங் ஊழியர்கள் 2 பேருக்கு தூக்குதண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

கேட்டரிங் ஊழியர்கள்

மும்பை மான்கூர்டில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் ரஹிமுதின் சேக் (வயது29), சந்திப் சிர்சாத்(25). இவர்கள் இருவரும் கடந்த 2012–ம் ஆண்டு மே 9–ந்தேதி நவிமும்பை வாஷிக்கு சென்றிருந்தனர்.

வாஷி பஸ் நிறுத்தம் ஒன்றில் 20 மற்றும் 28 வயது பெண்கள் இரண்டு பேர் பழைய பொருட்களை சேகரித்து கொண்டிருந்ததை பார்த்தனர்.

அவர்களை நெருங்கி பேச்சு கொடுத்த 2 பேரும் தங்களது கேட்டரிங் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர். வேலையில் சேருவதற்காக தங்களுடன் வரும்படி அவர்களை அழைத்தனர். இதை நம்பி பெண்கள் இருவரும் அவர்களுடன் சென்றனர்.

கற்பழிப்பு

சி.பி.டி. பேலாப்பூரில் அப்போது புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த பாலத்தின் அடியில் அழைத்து சென்று, இரண்டு பேரும் அந்த பெண்களுக்கு குளிர்பானத்தில் மதுவை ஊற்றி குடிக்க கொடுத்து வலுக்கட்டாயமாக கற்பழித்தனர்.

பின்னர் அந்த பெண்கள் தங்களை வெளியில் காட்டி கொடுத்துவிடுவார்களோ என பயந்துபோன இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் பிளேடால் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில், 28 வயது பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 20 வயது பெண்ணின் சத்தம்கேட்டு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், காவலாளி உள்பட மூன்று பேர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் அவர் குணமானார்.

கைது

இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக மே 14–ந்தேதி போலீசார் ரஹிமுதின்சேக், சந்திப் சிர்சாத் ஆகிய இருவரையும் மான்கூர்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, உயிர் தப்பிய 20 வயது பெண் உள்பட 11 பேர் இருவருக்கும் எதிராக சாட்சி அளித்தனர்.

இதன் மூலம் இருவருக்கும் எதிரான கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

தூக்குதண்டனை

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மனித தன்மையற்ற கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளனர். எனவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் சங்கீதா பாட் வலியுறுத்தினார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் தூக்குதண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்