ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிப்பு விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை விரைவில் புனரமைப்பு செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் 7 பிரகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமையப்பெற்று இருப்பதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பெரிய கோவில் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இக்கோவிலில் மூலவர் ரெங்கநாதர் கருவறையில் தென்திசை நோக்கி சயன கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக சுமார் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏராளமான திருப்பணி வேலைகள் நடந்தன. அப்போது கோவில் வளாகத்தில் பல இடங்களில் மண் மூடி காணப்பட்ட பகுதிகள் எல்லாம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் மறைந்திருந்த யானை சிற்பங்கள் வெளியே தெரியும்படி சீரமைக்கப்பட்டது.
நூற்றுக்கால் மண்டபம்ஆயிரங்கால் மண்டபத்தை போன்று, கோவிலின் தென்கிழக்கு மூலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் பகுதியில் நூற்றுக்கால் மண்டபம் இருந்ததும், பல ஆண்டுகளாக அது மறைக்கப்பட்டு இருந்ததும் கோவில் திருப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் தூண்களுக்கு இடையே சுவர் எழுப்பி மறைத்து இருந்ததும், அதன் மேல்பகுதியில் அடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததும், இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை படிந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த நூற்றுக்கால் மண்டபத்தை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணி தற்போது தான் தொடங்கி உள்ளது.
சீரமைக்கும் பணிநூற்றுக்கால் மண்டபத்தை மறைப்பதற்காக எழுப்பப்பட்டு இருந்த சுவர்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அடுப்புகளும் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது நூற்றுக்கால் மண்டபம் முழு அளவில் பார்ப்பதற்கு ‘பளிச்’ என காட்சி அளிக்கிறது. நூற்றுக்கால் மண்டபத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
பயன்பாட்டுக்கு வரும்இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஜெயராமன் கூறுகையில் ‘சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கால் மண்டபம் மறைக்கப்பட்டு இருந்திருக்கிறது. தற்போது அதனை கண்டுபிடித்து சீரமைத்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியின் போது நம்பெருமாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி, அருள்பாலித்ததாக தகவல்கள் உள்ளன. இதன் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நூற்றுக்கால் மண்டபம் பக்தர்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும். கிருஷ்ண ஜெயந்தியின்போது நம்பெருமாள் இந்த மண்டபத்தில் எழுந்தருள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார்.