விவசாயிகள் மடியேந்தி பிச்சை கேட்கும் போராட்டம் சென்னையில் 100–க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் விவசாயிகள் மடியேந்தி பிச்சை கேட்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-13 00:00 GMT
சென்னை,

விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் கு.பொன்னுசாமி, தமிழ்நாடு ஏரி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் சிவசாமி சேர்வை, கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கார்மாங்குடி வெங்கடேசன் ஆகியோரும் பங்கேற்றனர்.  

மடியேந்தி பிச்சை

ஆர்ப்பாட்டத்தின்போது என்.எஸ்.சி.போஸ் சாலையில் செல்வோரிடம் விவசாயிகள் மடியேந்தி பிச்சை கேட்டு போராடினர். பின்னர் மத்திய–மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோ‌ஷமிட்டபடி விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட தயாரானார்கள்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் அந்த பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

தள்ளுபடி

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது பூ.விசுவநாதன் பேசியதாவது:–

மழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கிறது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் உயிரற்ற உடம்பாய் காணப்படுகின்றனர். எனவே ஐகோர்ட்டு உத்தரவுப்படி வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் மற்றும் நகைக்கடனை எந்த வித நிபந்தனையும் இல்லாமல் தள்ளுபடி செய்யவேண்டும்.

அதேவேளையில் விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மழைக்கு முன்பு ஏரிகள், அணைகள் தூர்வாரப்பட வேண்டும். தடுப்பணைகளை கட்டி முடிப்பதுடன், நிலுவையில் உள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யவேண்டும். முக்கியமாக கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவை தொகை ரூ.1,300 கோடியை உடனே வழங்கும் வகையில் தமிழக முதல்–அமைச்சர் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

நிதியுதவி

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். டெல்டா பகுதிகளில் வறட்சியின் காரணமாக உயிரிழந்த 400 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும். முந்திரி விவசாயம் பாதிக்கப்பட்ட அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாய கடன்களை வசூலிக்கும் வகையில் வங்கிகள் மேற்கொள்ளும் ‘ஜப்தி’ நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்கவும் உடனடி நடவடிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு  அவர் கூறினார். 

மேலும் செய்திகள்