ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டம்

ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-12 22:30 GMT

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்துள்ள ஸ்ரீ புரந்தான் கிராமம் பஸ் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, பின்னர் அதே பகுதியில் மாற்றப்பட்டு, அங்கு இயங்கி வந்தது. இங்கு டாஸ்மாக் கடை திறந்ததால் மது குடிப்போரால் பெண்கள் தனியாக நடமாட அச்சப்படுகின்றனர். மது அருந்திவிட்டு வருபவர்களால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், சமூகநலத்துறை தாசில்தார் தாரகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையையடுத்து அதிகாரிகள் இன்னும் 10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்றி விடுகிறோம் என்று கூறியதின் பேரில் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்