மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் ஒரே வரிசையில் மாற்றி அமைப்பு

மெரினா கடற்கரையில் ஆங்காங்கே இருக்கும் கடைகளை அகற்றி ஒரே வரிசையாக சீரமைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2017-05-12 23:45 GMT
சென்னை,

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும், சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுவது மெரினா கடற்கரை. இந்த கடற்கரைக்கு சென்னை வாசிகள் மட்டுமல்லாமல், வெளியூர் வாசிகளும் சுற்றுலா வந்து செல்கின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் கடற்கரையில் ஆங்காங்கே சில வியாபாரிகள் கடைகளை வைத்து திண்பண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த பொருட்களால் கடற்கரை முழுவதும் குப்பையாக காணப்படுகிறது என்றும், இதனால் கடற்கரை மாசு நிறைந்து உள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து ‘தினத்தந்தி’யிலும் படம் வெளியிடப்பட்டு இருந்தது. அவ்வப்போது, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், சிறிது நேரத்தில் புற்றீசல் போல மீண்டும் கடைகள் ஆங்காங்கே முளைத்து விடுகின்றன.

மாற்றி அமைப்பு

இந்த நிலையில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கலங்கரை விளக்கத்திற்கு பின்னால் உள்ள கடற்கரை பகுதியில் ஆங்காங்கே இருக்கும் கடைகளை பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் மூலம் ஒரே வரிசையில் மாற்றி அமைத்தனர். அப்போது அங்கு இருந்த கடைக்காரர்கள், மாநகராட்சி அதிகாரிகளை கடைகளை அகற்றவிடாமல் பொக்லைன் எந்திரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடைகள் அகற்றப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மெரினா கடற்கரையில் ஆங்காங்கே கடைகள் இருப்பதால் கடற்கரை குப்பையாக காணப்படுகிறது என தொடர் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் தற்போது, ஆங்காங்கே இருக்கும் கடைகளை அகற்றி ஒரே வரிசையில் வைத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்