கோவை மாவட்டத்துக்கு 10–வது இடம் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95.83 சதவீதம் தேர்ச்சி

கோவை மாவட்டத்துக்கு 10–வது இடம் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95.83 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகம்

Update: 2017-05-12 22:30 GMT

கோவை,

பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95.83 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளதால் கோவை மாவட்டம் 10–வது இடம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி ஆகும்.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

10–வது இடம்

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2–ந் தேதி தொடங்கி 31–ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 951 மாணவ–மாணவிகள் எழுதினர். இதில் 36 ஆயிரத்து 369 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மாணவர்கள் 16 ஆயிரத்து 778 பேர் தேர்வு எழுதியதில் 15 ஆயிரத்து 747 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.86 சதவீதம் ஆகும். மாணவிகள் 21 ஆயிரத்து 173 பேர் தேர்வு எழுதியதில் 20 ஆயிரத்து 622 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.40 சதவீதம் ஆகும்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் 95.83 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 1.68 சதவீதம் அதிகம். இதன் மூலம் கோவை மாவட்டத்துக்கு 10–வது இடம் கிடைத்து உள்ளது. கோவை மாவட்ட தேர்ச்சி விகிதம் 2016–ம் ஆண்டு 94.15 சதவீதமாக இருந்தது.

100 சதவீத தேர்ச்சி

கோவை மாவட்டத்தில் 346 பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 13 அரசு பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 சமூக நலப்பள்ளி, 119 தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 147 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

விடைத்தாள் நகல்

விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவ–மாணவிகள் அந்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் நாளை மறுநாள் (திங்கட் கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவதா? அல்லது மறுகூட்டல் செய்வதா? என்பதை முன்கூட்டியே தீர்மானித்து கொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் கோரும் பாடத்திற்கு, மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்