கன்னியாகுமரி–சென்னை இடையே பயணிகள் கப்பல் இயக்குவது குறித்து ஆய்வு

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

Update: 2017-05-12 22:45 GMT

கன்னியாகுமரி

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனை நான் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறேன். தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன்.

ரூ.15 கோடியில் பாலம்

திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. கடலில் நிகழும் மாற்றங்களால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இங்குள்ள விவேகானந்தர் பாறை–திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.15 கோடியில் பாலம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

கப்பல் போக்குவரத்து

கன்னியாகுமரி–சென்னை இடையே கடல் வழி போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், கன்னியாகுமரியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம்.

கன்னியாகுமரியில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்படும் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மேம்படுத்தப்படும். திருச்செந்தூரில் சுற்றுலா துறை ஓட்டலில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்