திண்டுக்கல் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: மதுபாட்டில்களை ரோட்டில் வீசி உடைத்த பொதுமக்கள்

திண்டுக்கல் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு இருந்த மதுபாட்டில்களை ரோட்டில் வீசி பொதுமக்கள் உடைத்தனர்.

Update: 2017-05-12 22:45 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள பித்தளைப்பட்டியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வந்தது. கோர்ட்டு உத்தரவு காரணமாக அந்த கடை மூடப்பட்டது. அந்த கடை, திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் ரோட்டில் உள்ள ஒத்தக்கடைக்கு மாற்றப்பட்டது. அங்கு மதுபானங்கள் கொண்டுவரப்பட்டு, விற்பனையும் தொடங்கியது.

இந்த நிலையில், ஒத்தக்கடைக்கு அருகே உள்ள கோபுகவுண்டன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று இரவு மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். திடீரென மதுக்கடைக்குள் புகுந்து சூறையாடினர். அங்கு இருந்த மதுபான பெட்டிகளை ரோட்டுக்கு கொண்டு வந்தனர். அதில் இருந்த மதுபாட்டில்களை எடுத்து ரோட்டில் போட்டு உடைத்தனர்.

ரூ.2 லட்சம் மதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கிராம மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கினர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக 8.15 மணி முதல் 10 மணி வரை அந்த பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது. அந்த சாலையில் வந்த வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இந்த போராட்டத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் ரோட்டில் போட்டு உடைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்கள் முற்றுகை

திண்டுக்கல் நகரில் ஆர்.எம். காலனி சாலை, ரவுண்டு ரோடு ஆகிய 2 இடங்களில் மட்டுமே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதில், ஆர்.எம்.காலனியில் உள்ள கடையில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே ஆர்.எம்.காலனி சாலை வழியாக பெரும்பாலான மாணவிகள் கல்லூரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், அந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இருப்பினும் அந்த பகுதியில் மதுக்கடை செயல்பட்டு வருவதால் மாணவிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று ஆர்.எம்.காலனி, மருதாணிக்குளம், ராமநாதபுரம் பகுதி பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் கடையை மூடக்கோரி திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே மேற்கு தாசில்தார் மிருணாளினி அங்கு வந்தார். அவரிடம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மனு கொடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்