கொடைக்கானலில் சாலையோர கடைகளுக்குள் புகுந்த சுற்றுலா வேன்

கொடைக்கானலில் பரபரப்பு: சாலையோர கடைகளுக்குள் புகுந்த சுற்றுலா வேன் வியாபாரி படுகாயம்

Update: 2017-05-12 21:45 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானல் வனப்பகுதியில் பைன் மரங்கள் அமைந்துள்ள பகுதி சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசிக்கும் இடமாக உள்ளது. இப்பகுதியில் சாலையோரத்தில் செல்லபுரத்தை சேர்ந்த ரவி (வயது 52), வசந்தி, தாயம்மாள் உள்பட பலர் கடை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளுடன் ஒரு வேன் வந்தது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடையின் அருகில் வேன் நிறுத்தப்பட்டது. வேனை அட்டுவம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார்.

பின்னர் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட்டு ரசித்துவிட்டு மீண்டும் வேனுக்கு திரும்பினர். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் தானாக நகர்ந்து அங்கிருந்த ரவி உள்பட 3 பேரின் கடைகளுக்குள் புகுந்து சேதப்படுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இதில் ரவி படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற கடைகளில் இருந்தவர்களும், வேனில் இருந்த சுற்றுலா பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கொடைக்கானல் போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்