திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 92.8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 92.8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

Update: 2017-05-12 22:30 GMT

திண்டுக்கல்,

தமிழ்நாடு முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியாகின. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 187 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 332 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.

இதில் 9 ஆயிரத்து 373 மாணவர்கள், 11 ஆயிரத்து 350 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 723 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,609 பேர் தோல்வி அடைந்தனர். அதன்படி தேர்ச்சி விகிதம் 92.8 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வில் 90.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதை விட 2.32 சதவீதம், தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.

அரசு பள்ளிகள்

மாவட்டம் முழுவதும் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அந்த பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுதினர். அதில் 7 ஆயிரத்து 723 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,051 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 88 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 81 சதவீதம் ஆகும். அதன்மூலம் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 7 சதவீதம் உயர்ந்து உள்ளது.

இதுதவிர 2 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 59 பேர் தேர்வு எழுதினர். அதில் 47 பேர் தேர்ச்சி பெற்றனர். 12 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 79.7 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90 சதவீதம் ஆகும். அதன்மூலம் 10.3 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மேலும் 6 கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 302 பேர் தேர்வு எழுதினர். அதில் 262 பேர் தேர்ச்சி பெற்றனர். 40 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 86.8 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட 20.8 சதவீதம் அதிகம்.

உதவி பெறும் பள்ளிகள்

அதேபோல் 2 நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 287 பேர் தேர்வு எழுதினர். அதில் 252 பேர் தேர்ச்சி பெற்றுவிட, 35 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 87.8 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட 27.8 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் மாவட்டத்தில் 47 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

அந்த பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 765 பேர் தேர்வு எழுதினர். அதில் 8 ஆயிரத்து 432 பேர் தேர்ச்சி பெற்றனர். 333 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட 1.2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

மெட்ரிக் பள்ளிகள்

மேலும் 6 தனியார் சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 605 பேர் தேர்வு எழுதினர். அதில் 581 பேர் தேர்ச்சி பெற்றனர். 24 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 96 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைவு. அதேபோல் 54 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 540 பேர் தேர்வு எழுதினர்.

அதில் 3 ஆயிரத்து 426 பேர் தேர்ச்சி பெற்றனர். 114 பேர் தோல்வி அடைந்தனர். மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.8 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதம் ஆகும். இதன் மூலம் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் நல்ல முறையில் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்