ஹாசன் அருகே மர்ம விலங்கு கடித்து 25 ஆடுகள் செத்தன உரிய நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை
ஹாசன் அருகே மர்ம விலங்கு கடித்து 25 ஆடுகள் பரிதாபமாக செத்தன. உரிய நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹாசன்,
ஹாசன் அருகே மர்ம விலங்கு கடித்து 25 ஆடுகள் பரிதாபமாக செத்தன. உரிய நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
25 ஆடுகள் செத்தனஹாசன் தாலுகா அகலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தியாவே கவுடா. விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்து 70 ஆடுகள் வளர்த்து வந்தார். அகலஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வழக்கம்போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு ஆட்டுப்பட்டியில் அடைத்தார்.
நேற்று காலை தியாவே எழுந்து பார்த்தபோது, ஆட்டுப்பட்டிக்குள் 25 ஆடுகள் வயிறு, கழுத்து பகுதிகளில் காயமடைந்து செத்து கிடந்தன. மேலும் 10 ஆடுகள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனை பார்த்து தியாவே கவுடா அதிர்ச்சி அடைந்தார். ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறியதில் 25 ஆடுகள் செத்திருப்பது தெரியவந்தது.
தீவிர சிகிச்சைஇதுபற்றி கால்நடை மருத்துவர்களுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் விரைந்து வந்து ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் ஆடுகள் அதேப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. படுகாயமடைந்த ஆடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால், எந்த விலங்கு என்பதை உறுதியாக கூற முடியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் உறுதியாக கூற முடியும் என்றார்.
உரிய நிவாரணம் வழங்க கோரிக்கைஆடுகளை இழந்த தியாவே கவுடா, தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டும் இவருடைய ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 10 ஆடுகளை அடித்துக் கொன்றிருந்தது. இது 2–வது சம்பவம் ஆகும். கடந்த முறை 10 ஆடுகளை இழந்ததற்கு அரசு சார்பில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால் இந்த முறையாவது உரிய நிவாரணம் கிடைக்குமா? என்று விவசாயி எதிர்பார்த்து காத்துள்ளார்.