திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.05 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.05 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி, மாநில அளவில் 8-வது இடம் கிடைத்தது;

Update: 2017-05-12 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.05 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 8-வது இடத்தை பெற்றுள்ளது.

96.05 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவர பட்டியலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி நேற்று காலை 10.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உடன் இருந்தார்.

பின்னர் கலெக்டர் எஸ்.ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 60 அரசு பள்ளிகள், 7 மாநகராட்சி பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் பள்ளிகள், 10 சுயநிதி பள்ளிகள், 94 மெட்ரிக்பள்ளிகள் என 189 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 183 மாணவர்கள், 13 ஆயிரத்து 859 மாணவிகள் என 25 ஆயிரத்து 42 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 594 மாணவர்கள், 13 ஆயிரத்து 458 மாணவிகள் என 24 ஆயிரத்து 52 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94.73 சதவீதமும், மாணவிகள் 97.11 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 96.05 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நமது மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.20 ஆக இருந்தது. இந்த ஆண்டு 0.85 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 1.73 சதவீதமும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 0.11 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது.

அரசு பள்ளிகள்

60 அரசு பள்ளிகளில் 8 ஆயிரத்து 153 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 7 ஆயிரத்து 645 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.77 சதவீத தேர்ச்சியாகும். அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 0.94 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. அதுபோல் 7 மாநகராட்சி பள்ளிகளில் 2 ஆயிரத்து 988 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 86.77 சதவீதத்தை எட்டியுள்ளனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 3.49 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

18 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆயிரத்து 883 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.81 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.31 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து இருக்கிறது. 10 சுய நிதி பள்ளிகளில் 1,686 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 1,671 பேர் தேர்ச்சி பெற்று 99.11 சதவீதம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.55 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். 94 மெட்ரிக் பள்ளிகளில் 8 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 8 ஆயிரத்து 280 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.38 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.15 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.

8-வது இடம்

மாநில அளவில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் 8-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 6-வது இடத்தை பெற்று இருந்தது. கடந்த ஆண்டை விட 0.85 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதிலும் மாநில அளவில் 8-வது இடம் கிடைத்துள்ளது.

தேர்ச்சி சதவீதத்தில் பின் தங்கிய திருப்பூர் மாவட்டம்

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் தொடர்ந்து முன்னேறி வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 10-வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், கடந்த ஆண்டு 95.20 சதவீதம் பெற்று மாநில அளவில் 6-வது இடத்தை எட்டிப்பிடித்தது. இந்த ஆண்டு 96.05 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதிலும் மாநில அளவில் 8-வது இடம் பெற்று கடந்த ஆண்டைக்காட்டிலும் திருப்பூர் மாவட்டம் 2 இடம் பின் தங்கியுள்ளது.

மேலும் செய்திகள்