திருவள்ளூர் அருகே ரூ.7½ லட்சம் மதுபாட்டில்களை சேதப்படுத்திய வழக்கில் 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே மதுக்கடையை உடைத்து ரூ.7½ லட்சம் மதுபாட்டில்களை சேதப்படுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-05-12 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கூட்டுசாலை அருகே இருந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டது. அந்த கடை தற்போது அரக்கோணம் செல்லும் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த கடையை மூடக்கோரி  வரதாபுரம் மற்றும், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் இந்த கடையை மூடுவதாக உறுதியளித்தனர்.

ஆனால் அதிகாரிகள் கூறியதுபோல் அந்த மதுக்கடை மூடப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாராயணபுரம், வரதாபுரம், மஞ்சாக்குப்பம், சின்னமஞ்சாக்குப்பம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட சென்றனர். இதை அறிந்த கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். மூடப்பட்ட அந்த கடை முன்பு திரண்ட 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையின் இரும்பு ‌ஷட்டரை கற்களாலும், இரும்பு கம்பியாலும் அடித்து உடைத்து திறந்தனர்.

2 பேர் கைது

பின்னர் கடைக்கு உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த ரூ.7½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை தூக்கி வெளியே கொண்டு வந்து ரோட்டில் போட்டு உடைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த மதுக்கடையின் மேற்பார்வையாளர் பாஸ்கர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுக்கடையை உடைத்து மதுபாட்டில்களை சேதப்படுத்தியதாக திருவாலங்காட்டை சேர்ந்த உதயா என்கின்ற உதயகுமார் (வயது 36), பாலமுருகன்(22) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்