நாகர்கோவிலில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 2 அமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் நேற்று நடந்த அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.

Update: 2017-05-12 22:15 GMT

நாகர்கோவில்,

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அதிக அளவில் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி முதலாவது ஆய்வுக்கூட்டம் குமரி மாவட்டத்தில் தற்போது நடந்தது.

முதன்மை மாநிலம்

குமரி மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா அல்லது அதற்கு நிகரான ஆவணங்கள் ஏதேனும் வைத்திருக்கும் தகுதியானவர்களுக்கு பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசு ரூ.60 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்குகிறது. இந்த உன்னதமான திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக செயல்படுத்தி வருகிறது.

எனவே வீடு இல்லாதவர்கள் வீடு கட்ட விரும்பினால் இந்த திட்டத்தின் மூலம் மானிய உதவி வழங்கப்படும். அந்த வகையில் பேரூராட்சிகள் அதிகமாக கொண்ட குமரி மாவட்டத்தை, முதன்மை மாவட்டமாக உருவாக்க அதிக அளவில் வீடுகள் கட்டிக்கொடுக்க பேரூராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.

3 லட்சம் வீடுகள்

நிலம் மற்றும் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு அரசு நிலத்திலேயே மாடிக்கு மேல் மாடியாக வீடு கட்டிக்கொடுக்கிற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, 10 லட்சம் வீடுகள் கட்டித்தருவோம் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். அதில் முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் ரூ.142.03 கோடி மதிப்பில் 4,003 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையாநாயுடு, தமிழக தலைமை செயலகத்தில் கூட்டம் நடத்த இருக்கிறார். அந்த கூட்டத்தில் நாங்களும் கலந்துகொண்டு இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்