பரங்கிப்பேட்டை அருகே பசுமாடு மீது பயணிகள் ரெயில் மோதல்; என்ஜினில் கொம்பு சிக்கியதால் நடுவழியில் நின்றது மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டது

பரங்கிப்பேட்டை அருகே பசுமாடு மீது பயணிகள் ரெயில் மோதியது.

Update: 2017-05-12 23:15 GMT

பரங்கிப்பேட்டை,

விழுப்புரம் ஜங்சனில் இருந்து பண்ருட்டி, கடலூர், பரங்கிப்பேட்டை, கிள்ளை, சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல நேற்று மதியம் 2.35 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும், கிள்ளைக்கும் இடையே நவாப்பேட்டை என்ற இடத்தில் மாலை 3.50 மணிக்கு சென்றது.

அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற பசு மாடு மீது பயணிகள் ரெயில் மோதியது. இதில் அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே செத்தது. அந்த மாட்டின் கொம்பு, பயணிகள் ரெயில் என்ஜினில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த ரெயில் நடுவழியில் நின்றது.

என்ஜினில் சிக்கிய கொம்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர்கள், கீழே இறங்கி பார்த்தனர். அவர்களால், என்ஜினில் சிக்கிக்கொண்ட கொம்பை எடுக்க முடியவில்லை. இது குறித்து என்ஜின் டிரைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், ரெயிலை மெதுவாக இயக்கி அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர்கள், ரெயிலை மெதுவாக இயக்கி கிள்ளை ரெயில் நிலையத்தில் 4 மணிக்கு நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து மாற்று என்ஜினுடன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கிள்ளை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களாலும் என்ஜினில் சிக்கிய மாட்டின் கொம்பை எடுக்க முடியவில்லை.

மாற்று என்ஜின் மூலம்...

இதையடுத்து பயணிகள் ரெயில் என்ஜினுடன், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 6.05 மணிக்கு கிள்ளை ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டது. ரெயில் என்ஜினில் மாட்டு கொம்பு சிக்கியதால் பயணிகள் ரெயில் 2.05 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்