கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் விழாக்கோலம்

சித்திரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக கள்ளழகர் மலைக்குத்திரும்பும் விழா இன்று நடக்கிறது.

Update: 2017-05-12 23:00 GMT

கள்ளந்திரி,

மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்காக, அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப்பெருமாள் கடந்த 8–ந்தேதி மாலை தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக வந்த அவர், அன்று நள்ளிரவு சுந்தரராஜன்பட்டியில் உள்ள மறவர் மண்டபத்தில் தங்கி, மறுநாள் அதிகாலை 2–30 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்தார்.

அவரை காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து, வணங்கி வரவேற்றனர். பின்னர் மறுநாள் (10–ந்தேதி) தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்பு, ராமராயர் மண்டபம் சென்று, அங்கிருந்து புறப்பட்டு இரவு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தங்கினார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (11–ந்தேதி) காலை சே‌ஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து, அங்கு மதியம் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தார். தொடர்ந்து இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தங்கிய கள்ளழகர் பக்தர்களுக்கு தசாவதாரத்தில் காட்சி அளித்தார். இத்துடன் மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.

மலைக்கு திரும்பும் விழா

அதன்பின்னர் நேற்று மதியம் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் புறப்பட்டு, இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் தங்கினார். தொடர்ந்து இன்று (13–ந்தேதி) மலைக்கு திரும்பும் விழா நிகழ்ச்சியில், அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் வையாழியாகி அழகர்மலைக்கு புறப்பட்டார். தொடர்ந்து ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், மூன்றுமாவடி வழியாக மலைக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி இன்று இரவு அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து கலந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்து, அவரை மலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்