அஞ்செட்டி அருகே மண் சரிந்து விழுந்ததில் ஊரக வேலை திட்டத்தில் ஈடுபட்ட பெண் சாவு மற்றொருவர் படுகாயம்

அஞ்செட்டி அருகே மண் சரிந்து விழுந்ததில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட

Update: 2017-05-12 22:45 GMT

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்ட மஞ்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கேரட்டி – மேலூர் செல்லும் மண்சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மதியம் உணவு இடைவேளையில் அந்த பகுதியில் உள்ள வயல் பகுதியில் அமர்ந்து பெண்கள் சிலர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த மேல் பகுதியில் பெரிய மண் மேடு ஒன்று இருந்தது. அது நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஈரப்பதமாக இருந்தது.

பெண் சாவு

இந்த நிலையில் திடீரென அந்த மண் மேட்டில் இருந்து மண் சரிந்து விழுந்தது. அதில் திம்மன்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஈரப்பா என்பவரின் மனைவி முனியம்மா(வயது 45) என்பவர் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மல்லப்பா என்பவரின் மனைவி முனிமல்லி(35) என்ற பெண் படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்