பரமக்குடி சித்திரைத் திருவிழாவில் மோதல்; பிளஸ்–1 மாணவன் அடித்துக்கொலை 8 பேர் கைது

பரமக்குடி சித்திரை திருவிழாவின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டான்.;

Update: 2017-05-12 22:45 GMT

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சித்திரை திருவிழாவையொட்டி தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக எமனேசுவரத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். திருவிழாவிற்கு வந்த மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் அந்த பிளக்ஸ் போர்டை பார்த்து தரக்குறைவாக பேசினார்களாம். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் கண்டித்து விரட்டிஉள்ளனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் நகர், உலகநாதபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று ஏற்கனவே மோதலில் ஈடுபட்டவர்களுடன் தகராறு செய்துள்ளனர். இது பயங்கர மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்த மாணவன் முனியசாமி (வயது 16) என்பவரை சிலர் அடித்து, பலமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

பதற்றம்

மாணவன் முனியசாமி இறந்தது தெரியாமல் போலீசார் அவனது உடலை பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அவனை பரிசோதித்த டாக்டர் அவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதும் திருவிழாவை காணவந்த பொதுமக்கள் பீதிஅடைந்து களையத்தொடங்கினர். போலீசாரும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை அணைத்தனர். இதனால் இருட்டில் பொதுமக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் மின் விளக்குகளை எரியவிட்டனர்.

மாணவன் முனியசாமியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது அவர்கள் மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவனது சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் கோரிக்கை விடுத்தனர்.

8 பேர் கைது

கொலை செய்யப்பட்ட மாணவன் முனியசாமியின் சொந்த ஊர் வெங்கலக்குறிச்சி கிராமம். தாய் ராணி, தந்தை சேதுபாண்டி சென்னை கோயம்பேடு பகுதியில் டீக்கடை வைத்துள்ளனர். முனியசாமி பரமக்குடியில் உள்ள அவனது மாமா சண்முகவேலு என்பவரது வீட்டில் தங்கி படித்து வந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டிராதேவிபட்டினத்தை சேர்ந்த முருகநாதன்(25), திருவள்ளுவர் நகரை சேர்ந்த அருண்(20), பாண்டியராஜன்(21) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுஉள்ளது.

மேலும் செய்திகள்