குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு திருச்செங்கோடு உதவி கலெக்டர் நேரில் ஆய்வு

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முன்னேற்பாடு பணி

Update: 2017-05-12 22:15 GMT

குமாரபாளையம்,

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள சஷ்டி நகரில் நம்ம குமாரபாளையம் அமைப்பு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 20–ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுமேற்கொள்ள திருச்செங்கோடு உதவி கலெக்டர் கீர்த்திபிரியதர்சினி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று குமாரபாளையத்திற்கு சென்றனர். அங்கு ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்துள்ள இடத்தை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த குழுவில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

வாடிவாசல்

இந்த குழுவினர் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை பார்வையிட்டு, காளைகள் வரும் வழி, காளை பிடிக்கும் வீரர்கள் வரும் வழி, பொதுமக்கள் வரும் வழி, பொதுமக்கள் அமரும் இடம், அவசர வழி, முக்கிய பிரமுகர்கள் வரும் வழி, முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம், அரசு அலுவலர்கள் அமரும் இடம், பார்வையாளர்கள் அமரும் இடம், மருத்துவ குழு அமரும் இடம், மருத்துவ பரிசோதனைகள் செய்யும் இடம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ச்சியாக வாடிவாசல் அமைக்கும் பணி சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் தொடங்கியது. இதில் ஜல்லிக்கட்டு குழுவினர்கள், நம்ம குமாரபாளையம் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்