கலைத்துறையில் சாதனை படைத்த 10 சிறந்த கலைஞர்களுக்கு விருது கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த 10 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள்

Update: 2017-05-12 22:45 GMT

நாமக்கல்,

நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற கோடை கால கலை பயிற்சி முகாம் நிறைவு விழாவு மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளையும், பொற்கிழியையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சார்பில் பள்ளி செல்லும் சிறுவர்கள் கலைகளை பகுதி நேரமாக பயிலும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் என்ற பகுதி நேர கலை பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் கழித்திட கோடைகால கலைப்பயிற்சி முகாம் 10 நாட்கள் நாமக்கல் நகரில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கைவினை, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றில் 126 மாணவ, மாணவிகள் பயன் அடைந்து உள்ளனர்.

10 கலைஞர்களுக்கு விருது

மேலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலை மன்றங்களை அமைத்து அதன் வழியாக கலைத்திறனில் சிறந்து விளங்குபவர்களுக்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை சுடர்மணி விருதும், 51 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை நன்மணி விருதும், 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதும் என மொத்தம் 5 வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்விருதுகள் 2015–16 மற்றும் 2016–17–ம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கிட தீர்மானிக்கப்பட்டு, கலைத்துறையில் சாதனை படைத்த நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10 கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அடையாள அட்டை

தொடர்ந்து தேவார பாடகர் திருச்செங்கோடு சுந்தரகுருக்கள், நாதசுரக்கலைஞர் சிங்களாந்தபுரம் கணேசன் ஆகியோருக்கு கலைமுதுமணி விருது தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும், சிலம்பக்கலைஞர் பொத்தனு£ர் பொன்னுசாமி, வீணை இசைக்கலைஞர் திருச்செங்கோடு மயிலாம்பிகா ஆகியோருக்கு கலை நன்மணி விருதும் தலா ரூ.7,500–க்கான காசோலையையும், ஓவியக்கலைஞர் நிர்மலா தப்பாட்டக்கலைஞர் செல்லப்பம்பட்டி சுரேஷ் ஆகியோருக்கு கலைச்சுடர்மணி விருதும், தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையையும், மரக்கால் ஆட்டக் கலைஞர் நன்செய் இடையார் சரவணன், தவில் கலைஞர் ராசிபுரம் வெங்கடேசன் ஆகியோருக்கு கலை வளர்மணி விருதும், தலா ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையையும், தேவயாணி (பரதம்), சுரேந்தர் (தெருக்கூத்து) ஆகியோருக்கு கலை இளமணி விருதும், தலா ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையையும் என மொத்தம் 10 கலைஞர்களுக்கு விருதுகளையும், ரூ.55 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார். மேலும் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் நடத்தப்பட்ட மாவட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 சிறுவர்களுக்கு பரிசுகளும், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட கலை மன்றத்தின் 30 கலைஞர்களுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவில் கலை பண்பாட்டுத்துறையின் சேலம் மண்டல உதவி இயக்குனர் ஹேமநாதன், ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், நகரவை உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜெகநாதன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ரவி, கிராம கல்விக்குழு உறுப்பினர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்