தர்மபுரி மாவட்டத்தில், பிளஸ்–2 தேர்வில் 92.23 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட 1.84 சதவீதம் அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 92.23 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டைவிட 1.84 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.

Update: 2017-05-12 23:15 GMT

தர்மபுரி

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வெளியிட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வை 92 அரசு பள்ளிகள், 48 தனியார் பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள், 2 பழங்குடியினர்நல பள்ளிகள், ஒரு சமூகநலத்துறை பள்ளி மற்றும் ஒரு ஆதிதிராவிடர் பள்ளி என மொத்தம் 148 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினார்கள்.

92.23 சதவீத தேர்ச்சி

இதன்படி 11 ஆயிரத்து 211 மாணவர்களும், 10 ஆயிரத்து 588 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 799 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதினார்கள். இவர்களில் 20 ஆயிரத்து 107 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் 10 ஆயிரத்து 165 பேரும், மாணவிகளில் 9 ஆயிரத்து 941 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்ச்சி 92.23 சதவீதம் ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 90.67 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.89 சதவீதமாகும்.

தேர்ச்சி அதிகரிப்பு

கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்ச்சி சதவீதம் 90.42 ஆக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்ச்சி 1.81 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்