விசாரணை கைதி மர்மச்சாவு ரெயில்வே போலீசார் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கியது

விசாரணை கைதி மர்மச்சாவு அடைந்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கி உள்ளது.

Update: 2017-05-11 22:24 GMT
மும்பை,

விசாரணை கைதி மர்மச்சாவு அடைந்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கி உள்ளது.

மர்மச்சாவு

மும்பை வடாலா ரெயில்வே போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அக்னலோ(வயது 25), முகமது இர்பான், சுபியான் கான் மற்றும் ஒரு மைனர் வாலிபர் ஆகியோரை திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

இவர்களில் அக்னலோ விசாரணையை தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரெயில்வே போலீசார் அக்னலோவுடன் தகாத உறவில் ஈடுபட்டு கொலை செய்து விட்டதாக அவரது தந்தை லியோ குற்றம் சாட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

துறை ரீதியான விசாரணை


அக்னலோவிடம் விசாரணை நடத்திய ரெயில்வே போலீசார் 8 பேரில் சுரேஷ் மானே, விகாஸ் சூர்யவன்சி, சத்யஜித் காம்பிளே ஆகியோர் மீது கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், மும்பை ரெயில்வே போலீஸ் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரெயில்வே போலீசார் மீது துறை ரீதியான விசாரணையை தொடங்கி உள்ளது.

இதில், ரெயில்வே போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி வாக்குமூலம் அளிக்க வரும்படி அக்னலோவின் தந்தை லியோக்கு ரெயில்வே போலீஸ் உதவி கமிஷனர் மச்சிந்திரா சவான் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுபற்றி லியோ கூறுகையில், ‘நான் ரெயில்வே போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க செல்ல மாட்டேன். அவர்களது முகத்தை பார்க்க எனக்கு விருப்பமில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்