ஆரேகாலனியில் காணாமல் போன தமிழ் சிறுமி வனவிலங்கு கடித்து குதறி சாவு
ஆரேகாலனியில் காணாமல் போன தமிழ் சிறுமி வனவிலங்கு கடித்து குதறி உயிரிழந்தாள். அவளது துண்டான தலை மற்றும் சிதைந்த உடல் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.;
மும்பை,
ஆரேகாலனியில் காணாமல் போன தமிழ் சிறுமி வனவிலங்கு கடித்து குதறி உயிரிழந்தாள். அவளது துண்டான தலை மற்றும் சிதைந்த உடல் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
சிறுமி மாயம்கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் முத்துவேல்(வயது37). இவர் மும்பை கோரேகாவ் கிழக்கு ஆரே காலனி பவானி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தர்ஷினி என்ற மகள் இருந்தாள்.
கடந்த 8–ந்தேதி அன்று இரவு 9.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு சிறுமி தர்ஷினி கை கழுவுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
ஆனால் அதன்பின்னர் திடீரென அவள் காணாமல் போய் விட்டாள். இதனால் கலக்கம் அடைந்த முத்துவேலின் குடும்பத்தினர் அவளை தேடி அலைந்தனர்.
ஆனால் எங்கு தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் ஆரேகாலனி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.
உடல் மீட்புஇந்தநிலையில், நேற்றுமுன்தினம் மதியம் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆரேகாலனி வனப்பகுதியில் சென்று தேடினார்கள். அப்போது ஒரு சிறுமியின் துண்டான தலை மற்றும் சிதைந்த உடல் கிடந்ததை பார்த்தனர். அது தர்ஷினி தான் என முத்துவேல் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து சிறுமியின் தலை மற்றும் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி தர்ஷினி பிணமாக மீட்கப்பட்டது அவளது குடும்பத்தினர் மற்றும் ஆரேகாலனி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விலங்கு தாக்கி சாவுஆரேகாலனி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. எனவே அவளை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவள் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்தநிலையில், சிறுமி தர்ஷினி வன விலங்கு கடித்து குதறியதால் தான் பலியாகி இருப்பது தெரியவந்து உள்ளதாக மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் ரேஷ்மி கரந்திகர் தெரிவித்து உள்ளார்.