மேட்டுப்பாளையத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் 50 பேர் கைது

மேட்டுப்பாளையத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-11 21:36 GMT
புதுச்சேரி,

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி புதுவை மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் மூடப்பட்ட ஒரு மதுக்கடை மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகர பகுதியில் அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

50 பேர் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், சம்பந்தப்பட்ட கலால்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுகூறி பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்