உடுப்பி அருகே உயர் மின் அழுத்ததால் அடுத்தடுத்து 12 வீடுகளில் தீ விபத்து ரூ.8 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

உடுப்பி அருகே உயர் மின் அழுத்தத்தால் அடுத்தடுத்து 12 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 12 வீடுகளில் தீ விபத்து உடுப்பி தாலுகா கோட்டேஸ்வர் அருகே பீஜாடி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மின்தடை செய

Update: 2017-05-11 20:33 GMT

மங்களூரு,

உடுப்பி அருகே உயர் மின் அழுத்தத்தால் அடுத்தடுத்து 12 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

12 வீடுகளில் தீ விபத்து

உடுப்பி தாலுகா கோட்டேஸ்வர் அருகே பீஜாடி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மின்தடை செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் மின்சாரம் வந்தபோது, அந்தப்பகுதியில் அடுத்தடுத்து உள்ள 12 வீடுகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டுக்குள் இருந்தவர்கள், அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பிடித்து எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடுப்பியில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ரூ.8 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

அதன்பேரில் உடுப்பி, கோட்டேஸ்வர், மணிப்பால் ஆகிய பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், வீடுகளில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். ஆனாலும் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. 12 வீடுகளில் இருந்தும் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த உடுப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயர் மின் அழுத்தத்தால் இந்தப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள், நேற்று உடுப்பியில் உள்ள மெஸ்காம் (மங்களூரு மின்சார வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து உடுப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்