புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்–லாரி மோதல்; சிறுவன் உள்பட 3 பேர் சாவு

புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்–லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-05-11 20:30 GMT

மங்களூரு,

புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்–லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள்–லாரி மோதல்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா மானி பகுதியை சேர்ந்தவர் நாராயண் (வயது 38). இவருடைய உறவினர்கள் ஹரீஷ் (30), விஸ்வா (12). இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மானியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பி.சி.ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஹரீஷ் ஓட்டினார்.

இந்த நிலையில் அவர்கள் மங்களூரு–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கல்லடுக்கா பகுதியில் வந்தபோது, எதிரே மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு மீன்கள் பாரம் ஏற்றி சென்ற லாரியும், ஹரீஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை அதேப்பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

3 பேர் சாவு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், ஹரீசும், விஸ்வாவும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாராயண் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து நாராயணை மீட்டு சிகிச்சைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பண்ட்வால் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மஞ்சய்யா, பண்ட்வால் புறநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரக்ஷித் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

பின்னர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்