திருப்போரூர் அருகே பூட்டிய காரில் டிரைவர் பிணம்

திருப்போரூர் அருகே பூட்டிய காரில் டிரைவர் பிணமாக கிடந்தார்.

Update: 2017-05-11 22:30 GMT
திருப்போரூர்,

திருப்போரூரை அடுத்த கொட்டமேடு கிராமத்தில், கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள மதுக்கடை அருகே கடந்த 2 நாட்களாக கார் ஒன்று பூட்டப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை கண்டு சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலை காரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் இருக்கையில் மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார்.

இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து அவரது உடலை வெளியே எடுத்தனர். காரில் உள்ள ஆவணங்களை வைத்து பார்த்தபோது காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் முகவரி இருந்தது.

மது போதையில்

அந்த முகவரியில் விசாரித்தபோது அங்கு வசித்து வந்தவர்கள் இறந்து போனவரின் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் திருக்கழுக்குன்றம் வட்டம், பாண்டூர் கிராமம் ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த முருகப்பன் என்பவரது மகன் ராமதாஸ் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் சொந்தமாக கார் வாங்கி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வந்தார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் மது போதையில் காரில் இருந்த ஏ.சி.யை போட்டு விட்டு தூங்கியதில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் ராமதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்