பழனி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

பழனி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2017-05-12 04:45 IST
பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் இருந்து கோம்பைக்காடு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அந்த மதுக்கடை முன்பு கிராமமக்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் மதுக்கடையை திறக்கக்கூடாது. அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக் கடையை மூடுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றனர். ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை. மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காலில் விழுந்த பெண்கள்

இதற்கிடையே பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள், நாங்கள் இப்பகுதி வழியாக தான் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். அப்போது இந்த மதுக்கடைக்கு வந்து மதுபானம் குடிப்பவர்கள் எங்களை இழிவாக பேசுகின்றனர். மேலும் நடைபாதையில் மதுபாட்டில்களை உடைத்து வீசிச்செல்கின்றனர். இதனால் எங்களால் அந்த பாதையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறி திடீரென போலீஸ் துணை சூப்பிரண்டின் காலில் விழுந்து பெண்கள் முறையிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் துணை சூப்பிரண்டு அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினார். பின்னர் இன்று முதல் (அதாவது நேற்று) அந்த மதுக்கடை செயல்படாது. மேலும் 2 நாட்களில் கடையில் உள்ள மதுபாட்டில்களை வேறு கடைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கடையில் மதுவிற்பனை நடைபெறாமல் இருக்க 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதனையும் மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பின்னரே கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்