காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் ரெயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 15–ந்தேதி முதல் 5 மாவட்டங்களில் 1 வாரம் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது.

Update: 2017-05-11 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம்முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட தலைவர் பால்ராசு, ஆம்ஆத்மி கட்சி பொறுப்பாளர் பழனிராஜன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாசிலாமணி, தங்கராசு மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

காவிரி தீர்ப்பாயத்தை கலைத்து அதன் இறுதி தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்திய மந்திரி உமாபாரதி தாக்கல் செய்துள்ள ஒற்றை தீர்ப்பாய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ரெயில் மறியல்


காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆற்று மணலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 28–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 15–ந்தேதி வரை 19 நாட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடந்தது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் எங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து வருகிற 15–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை 1 வாரம் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் மட்டும் அல்லாது கிராமப்புறங்களில் உள்ள ரெயில் நிலையங்களிலும் இந்த மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசு காவிரிப்படுகை மேலாண்மை வல்லுனர் குழு அமைத்திட தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது. அது காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பின்படி காவிரி உரிமைகளை செயல்படுத்தக்கூடியதா? இல்லையா? என்று ஆய்வு செய்து அதற்குரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதில் தமிழக அரசு மவுனம் காப்பது என்பது அரசின் செயலற்ற தன்மையை மட்டுமின்றி, காவிரி உரிமையை காக்க வேண்டுமென்ற அக்கறையுமின்றி இருப்பதை காட்டுகிறது. இந்த போக்கை கைவிட்டு தமிழக அரசு அந்த அறிக்கை குறித்து கருத்து சொல்வதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்