யானை துதிக்கையால் தூக்கி வீசியதில் தொழிலாளி சாவு

டி.என்.பாளையம் அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை யானை துதிக்கையால் தூக்கி வீசியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-05-11 23:15 GMT
டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கடம்பூரை அடுத்த குன்றி அருகே உள்ள அரிகியம் பகுதியை சேர்ந்தவர் அஜ்ஜதம்படி (வயது 50). கூலித்தொழிலாளி. இவரும், இவருடைய அண்ணன் மகன் நவீன்குமாரும் (13) நேற்று முன்தினம் அங்குள்ள வனப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்றனர்.

அங்கு மாடுமேய்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென புதர் பகுதியில் இருந்து யானை ஒன்று பிளிறியபடி நவீன்குமாரை நோக்கி ஓடி வந்தது. இதைக்கண்டதும் நவீன்குமார் அதிர்ச்சி அடைந்து ‘யானை, யானை’ என சத்தம் போட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடினான். அவனுடைய சத்தம் கேட்டு அஜ்ஜதம்படியும் அங்கிருந்து ஓடினார்.

சாவு


ஆனால் யானை பின்தொடர்ந்து விரட்டி சென்று துதிக்கையால் அஜ்ஜதம்படியை பிடித்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே நவீன்குமார், அரிகியம் கிராமத்துக்கு சென்று நடந்த விவரங்களை கூறினான். உடனே கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு அஜ்ஜதம்படி இறந்து கிடந்தார்.

இதுபற்றி அறிந்ததும் கடம்பூர் போலீசார், டி.என்.பாளையம் வனச்சரகர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜ்ஜதம்படியின் உடலை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அஜ்ஜதம்படியின் உடலை போலீசார் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்