திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

Update: 2017-05-11 22:45 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாந்தோறும் பவுர்ணமி தினத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு காலையில் வக்ரகாளியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் நவதானிங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் வக்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மகா தீபம்

அதை தொடர்ந்து கோவில் மேல் பிரகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என்ற கோ‌ஷத்துடன் மகாதீபத்தை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பக்தர்களின் வசதிக்காக சென்னை, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் செல்வராசு, சிவாச்சாரியர் சேகர் குருக்கள், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலைபூசாரி, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மழை பெய்ய வேண்டியும் சாமிக்கு சிறப்பு அபிஷேம், யாகமும் நடைபெற்றது.

தென்பசியார் நாகஅங்காளம்மன்

திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாகஅங்காளம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் சித்திரை மாத பவுர்ணமி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்