சித்ரா பவுர்ணமி திருவிழா கோலாகலம்

சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி ஓம்நவசிவாயா என்ற பக்திகோஷங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் 7 மலை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.

Update: 2017-05-11 23:00 GMT
கோவை

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை தென்கயிலாயம் என்று போற்றப்படுகிறது. கோவையிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 7 மலைகள் ஏறி அங்குள்ள சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். மேலை சிதம்பரம் என்ற திருப்பேரூருக்கு மூலத்தலமாக விளங்குவது தென்கயிலை மலையாகும். கடல் மட்டத்துக்கு மேல் 6 ஆயிரம் அடி உயரத்தில் கிரிமலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் பஞ்ச லிங்கேசுவரராக எழுந்தருளி உள்ளார்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருவது வழக்கம். ஆனால் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தான் சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. அன்று சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அதிலும் தமிழக மலைகளில் தென்கயிலாயம் என்று போற்றப்படும் கிரிமலையில் எழுந்தருளியுள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கம்பு ஊன்றி தரிசனம் செய்வதற்காக மலை ஏறி வருகிறார்கள்.

பக்தி கோஷம்

வெள்ளி விநாயகர் கோவில் மலை, பாம்பாட்டி மலை அல்லது சுனை வழுக்கு பாறை மலை, கைதட்டி மலை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை மலை, ஆண்டி சுனை மலை ஆகிய 6 மலைகளை தாண்டி 7-வது மலையான கிரி மலையின் உச்சியில் குகை கோவிலில் சுயம்புவாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார்.

சித்ரா பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் நிலவொளியில் 7 மலைகளிலும் நடந்து சென்று பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர். மலை ஏறும் போது பக்தர்கள், ‘ஓம்நமசிவாய’ என்று சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தும், ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்று பக்தி கோஷம் முழங்க உற்சாகத்துடன் ஏறினார்கள். பக்தர்களின் பக்தி கோஷங்கள் மலை முழுவதும் எதிரொலித்தது.

7 மலைகள் ஏறி சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் தாங்கள் கொண்டு சென்ற கம்புகளின் உதவியுடன் மலையில் இருந்து கீழே இறங்கினார்கள். கிரிமலை தரிசனம் செய்து விட்டு திரும்பிய பக்தர்களை அவர்களது உறவினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கிரிமலைக்கு சென்று திரும்பிய கணவர்களின் காலில் விழுந்து பெண்கள் ஆசி பெற்று கொண்டனர்.

பாக்கியம்

இதுகுறித்து பூண்டி கோவில் அர்ச்சகர் நாகராஜன் கூறியதாவது:-

வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பவுர்ணமிக்கு முதல் நாளே பக்தர்கள் மூங்கில் கம்பு ஊன்றி மலை ஏற தொடங்கி விடுவார்கள். அன்று இரவு முழுவதும் அவர்கள் 5½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று 6-வது மலையின் முடிவில் உள்ள ஓடையில் குளித்து விட்டு 7-வது மலையில் பக்தர்கள் ஏற தொடங்கி விடுவார்கள். அந்த ஓடையில் வரும் தண்ணீரில் உடலுக்கு நலன் பயக்கும் மூலிகைகள் கலந்திருக்கும். சித்ரா பவுர்ணமியன்று காலை 6 மணியளவில் 7-வது மலையான கிரி மலையின் உச்சியில் நின்று ஒரு திசையில் சூரியன் உதிப்பதையும், மற்றொரு திசையில் சந்திரன் மறைவதையும் பார்க்க பக்தர்கள் அதிக அளவில் திரள்வார்கள். இந்த காட்சி 7 மலை ஏறிய பக்தர்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் என்று கருதப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலையை உடல் உறுதி மற்றும் மனம் உறுதி உள்ளவர்கள் மட்டும் தான் ஏற முடியும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் அதில் ஏற முடியாது. ஒரு ஆண்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையுள்ள 4 மாதங்களான கோடைக்காலத்தில் மட்டுமே பக்தர்கள் இங்கு மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். மற்ற மாதங்களில் இந்த மலையில் ஏற முடியாது. அதற்கு காரணம் அங்கு கடுமையான குளிர் நிலவும். அந்த குளிரில் மனிதன் நடந்து செல்வது சாத்தியமில்லை.

லட்சக்கணக்கான பக்தர்கள்

இந்தியாவில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் கயிலாய யாத்திரைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி செல்வார்கள். அதற்கு அடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி மலை ஏற முடியும். கம்பு இல்லாமல் மலை ஏற முடியாது. மலை ஏறி விட்டு வந்த பின்னர் அந்த கம்பை உடல் நலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் மீது தடவினால் நோய் குணமாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே வெள்ளியங்கிரி மலை ஏற பயன்படுத்தும் மூங்கில் கம்பை பக்தர்கள் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் கடந்த 9 மற்றும் 10-ந் தேதி ஆகிய 2 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்துள்ளனர்.

இவர்களில் ஏராளமான சாதுக்களும் உடலில் விபூதியை பூசி கொண்டு கிரி மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

கோவையை சேர்ந்த சிவ பக்தர்கள் அமைப்பினர் உண்டியல் உரிமம் எடுத்துள்ளதால் மலையில் கடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. கோவையை சேர்ந்த தொழில் அதிபர் பி.சிவகணேஷ் ஏற்பாட்டின்பேரில் தன்னார்வ தொண்டர்கள் மலை உச்சிக்கு வரும் பக்தர்களை வரிசைப்படுத்தி எல்லோரையும் நெரிசலின்றி சிவபெருமானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள பகுதியை தவிர மற்ற பகுதி அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களை தவிர வேறு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என்றும் தன்னார்வ தொண்டர்கள் வைத்துள்ள பைகளில் மட்டுமே போட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமிக்கு மலை ஏறிய பக்தர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்த பின்னர் 7 மலைகளிலும் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வ தொண்டர்கள் சேகரித்து கீழே கொண்டு வந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்