கியாஸ் கசிவினால் தீ பிடித்து விபரீதம்: பயங்கர சத்தத்துடன் டீ கடை வெடித்து சிதறியது உரிமையாளர் படுகாயம்

கூடலூரில் கியாஸ் கசிவினால் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் டீ கடை வெடித்து சிதறியது.

Update: 2017-05-11 23:15 GMT

கூடலூர்,

கூடலூர் புஷ்பகிரி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55). இவர் அதே பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு எதிரில் டீ கடை வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று காலை 5¾ மணிக்கு சந்திரன் தனது கடையை வழக்கம் போல் திறந்தார். பின்னர் கடைக்குள் இருட்டாக இருந்ததால், அங்கிருந்த மின் விளக்குகளை எரிய வைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் டீ கடை வெடித்து சிதறியது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் கடையின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தகர கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

உரிமையாளர் படுகாயம்

இந்த நிலையில் டீ கடையில் வெடிகுண்டு வெடிப்பது போல் பலத்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கடையில் இருந்த பேக்கரி தின்பண்டங்கள், அலமாரிகள், தொலைக்காட்சி பெட்டி, அடுப்பு மற்றும் கண்ணாடி பாட்டில்கள் வெளியே தூக்கி வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடையின் பக்கவாட்டு சுவர் உடைந்து கிடந்தது.

இதற்கிடையில் கடைக்குள் படுகாயத்துடன் சந்திரன் உயிருக்கு போராடினார். உடனே அவரை, அங்கு வந்த சிலர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்திரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடலூர் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கியாஸ் கசிவால் வெடித்தது

இது குறித்து போலீசார் கூறியதாவது:– கடையின் உள்ளே வைத்திருந்த 2 சிலிண்டர்களில் ஒன்றில் இருந்து இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறை முழுவதும் நிரம்பி இருந்துள்ளது. மேலும் காற்று புகாதவாறு கடை அடைக்கப்பட்டு இருந்ததால் கியாஸ் செல்வதற்கு வழி ஏற்படவில்லை. இது பற்றி தெரியாததால் சந்திரன் கடையை திறந்ததும், கடைக்குள் இருந்த மின்சாதன விளக்குகளை எரிய வைப்பதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து தீ பொறி விழுந்து கியாசில் தீ பற்றி பலத்த சத்தத்துடன் டீ கடை வெடித்து சிதறியதாக தெரிகிறது. ஆனால் இந்த விபத்தில் சிலிண்டர்கள் வெடிக்க வில்லை. ஆகவே இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் தடயவியல் நிபுணர்களும் விபத்து நடந்த கடைக்கு விரைந்து சோதனை நடத்தினர். இதேபோல் சம்பவ இடத்தில் கூடலூர் ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையிலான வருவாய் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணாடிகள் உடைந்தன

இது குறித்து அந்த டீக்கடைக்கு பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:– நேற்று காலை சுமார் 6 மணி இருக்கும். திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் நாங்கள் ஏதோ குண்டு வைத்து விட்டார்களோ? என்ற பயத்தில், வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தோம். அப்போது டீ கடை வெடித்து சிதறிக்கிடந்தது. அதில் இருந்து பொருட்கள் சிதறிக்கிடந்தன.

இந்த விபத்தில் டீக்கடை தவிர, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, மற்றும் குடியிருப்புகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்துள்ளன. நல்ல வேளை டீக்கடை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளின் உறவினர்கள் யாரும் காலையில் டீ வாங்க யாரும் வரவில்லை. வந்து இருந்தால் உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்