சித்திரைத்திருவிழா: மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார் விடிய விடிய தசாவதாரம்; பக்தர்கள் தரிசனம்
மதுரை சித்திரைத்திருவிழாவில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதுரை,
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான மீனாட்சி– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 7–ந் தேதி நடந்தது.
இதையடுத்து, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு வந்த அழகர், சித்திரை முழுநிலவு தினமான நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபம் சென்றார். அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவில் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சாபவிமோசனம்அங்கிருந்து நேற்று காலை 6 மணிக்கு கள்ளழகர் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் பக்தி உலா நடைபெற்றது. பின்பு கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றார். மதியம் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவம் அருகில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரை வானில் பறக்கவிடப்பட்டது. அதை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.
தசாவதாரம்இரவு 11 மணியளவில் மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் அழகரின் தசாவதார காட்சிகளை கண்டு தரிசித்த னர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் பக்தி உலா நடக்க உள்ளது.
பூப்பல்லக்குபின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி நாளை(13–ந் தேதி) அதிகாலை பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 14–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அழகர்கோவிலை அடைகிறார்.