புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஆட்டோவில் 200 லிட்டர் சாராயம் கடத்தல் பெண் உள்பட 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஆட்டோவில் 200 லிட்டர் சாராயம் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-11 23:00 GMT

கடலூர்,

கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று புதுப்பாளையம் 4 முனை சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர்.

அந்த ஆட்டோவில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். ஆட்டோவை போலீசார் சோதனை செய்த போது, அதில் 5 சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் 200 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளாக போட்டு இருந்தது.

சாராயம் கடத்தல்

இதற்கிடையே அந்த ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து ஆட்டோவில் இருந்த 2 பேரையும் போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாதிரிக்குப்பம் முருகன் மனைவி அஞ்சலாட்சி (வயது 32), புதுப்பாளையம் முத்துக்குமரன்காலனியை சேர்ந்த பழனி மகன் மாதவன் (22) என்று தெரிய வந்தது.

இவர்கள் 2 பேரும் புதுச்சேரியில் இருந்து 200 லிட்டர் சாராயத்தை கடத்தி, கடலூரில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரான புதுப்பாளையம் ரவி மகன் ஜீவானந்தம் (25) என்றும் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து அஞ்சலாட்சி, மாதவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 200 லிட்டர் சாராயத்தையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தப்பி ஓடிய ஜீவானந்தத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்