தெள்ளாரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது கையும் களவுமாக பிடிபட்டார்

தெள்ளாரில் முழு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி வேளாண்மை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-11 22:30 GMT

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா குண்ணகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 51), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மணிலா சாகுபடி செய்வதற்காக மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடிவு செய்தார். இதற்காக தெள்ளார் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முழுமானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க உதவி வேளாண்மை அதிகாரி குமார் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கனகராஜ், பணம் தருவதாகக்கூறிவிட்டு சென்றார். பின்னர் இதுபற்றி அவர் திருவண்ணாமலையில் உள்ள லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கையும் களவுமாக கைது

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கனகராஜிடம் கொடுத்து அதை உதவி வேளாண்மை அதிகாரி குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் நேற்று கனகராஜ், தெள்ளாரில் உள்ள வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உதவி வேளாண்மை அதிகாரி குமாரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணப்பெருமாள் தலைமையிலான போலீசார் விரைந்து செயல்பட்டு உதவிவேளாண்மை அதிகாரி குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்