கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதம்

கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-03 22:30 GMT

கோவை,

அரசு டாக்டர்களின் 50 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும், தமிழகத்தின் சுகாதார குறியீடுகளின் தரம் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன்தினத்தில் இருந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று நடந்த போராட்டத்துக்கு கோவை மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசிங் முன்னிலை வகித்தார்.

கண்களில் கருப்பு துணி

இதில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கைகள் மற்றும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோன்று டாக்டர்களும் கண்களில் கருப்பு துணியை கட்டி இருந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரியில், மிக முக்கியமான அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்தது. நாள் குறித்து செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் அங்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

போராட்டம் தொடரும்

இந்த போராட்டம் குறித்து டாக்டர் ரவிசங்கர் கூறும்போது, ‘இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி கள் இருவரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர். இதனால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து அறிவிப்பார்கள். எனினும் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடக்கும்’ என்றார்.

மேலும் செய்திகள்