பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் தொழில் கடன் பெற தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Update: 2017-05-03 20:30 GMT
தூத்துக்குடி,

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் தொழில் கடன் பெற தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழில்கடன்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த தொழில் இனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும், சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வரையும் அதிகபட்ச திட்ட முதலீட்டுக்கான தொழிற்கடன்கள் மானியத்துடன் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு மானியமாக அதிகபட்ச திட்ட முதலீட்டில் 35 சதவீதம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். கடன் பெற விரும்புவோர் ஷ்ஷ்ஷ்.ளீஸ்வீநீஷீஸீறீவீஸீமீ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு உரிய வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

சான்றிதழ்கள்

மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து, பெறப்படும் ஒப்புகை சீட்டுடன் ஆதார் அட்டை, கல்வித் தகுதி குறித்த சான்றிதழ், சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றின் 2 நகல்களும், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எந்திரங்களுக்கான விலைப்புள்ளி பட்டியல் அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் தேர்வு

நடப்பாண்டில், மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல்பட்டிணம் நகரசபைகள் மற்றும் அனைத்து பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461–2340053, 2340152 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ள வேண்டும், என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்