ஊட்டியில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொடர் மழையால் மலர்கள் அழுகும் அபாயமும் ஏற்பட்டள்ளது.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 52 சதவீதம் அளவிற்கு மழை குறைவாக பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவியது. ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலும் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது.
இதனிடையே ஊட்டியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக லோயர்பஜார், படகு இல்லசாலை, கிரீன்பீல்டு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் சேரிங்கிராஸ் வணிக வளாகத்தில் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஊட்டி மட்டுமின்றி குன்னூர், நடுவட்டம், எமரால்டு, கிண்ணக்கொரை, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் அவதிஇந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்த போதிலும், மதியத்திற்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டியில் கோடை காலத்தில் மழை பெய்து வருவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஊட்டி நகரில் பல இடங்களில் மழையால் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளில் மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது.
மலர்கள் அழுகும் அபாயம்ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழையால் மலர்கள் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள மலர்களை மழையில் இருந்து காப்பற்ற அவற்றை பிளாஸ்டிக்போர்வை கொண்டு ஊழியர்கள் மூடி பாதுகாத்து வருகின்றனர்.
ஊட்டி மேரீஸ்ஹில் டாடாபாத் சாலையில் மழைநீர் நேற்றும் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இந்த வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மழைக்காலங்களில் இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மழை அளவு
நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம் வருமாறு:–
குன்னூர்– 25.5 மில்லி மீட்டர்
கேத்தி–20 மி.மீ.
கோத்தகிரி–9 மி.மீ.
நடுவட்டம்– 5 மி.மீ.
ஊட்டி–34 மி.மீ.
கிளன்மார்க்கன்–10 மி.மீ.
எமரால்டு–12 மி.மீ.
கெத்தை–2 மி.மீ.
கிண்ணக்கொரை–6 மி.மீ.
கோடநாடு–16 மி.மீ.
தேவாலா–1 மி.மீ.
பர்லியார்–2 மி.மீ.
கூடலூர் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம், வாழைகள் சரிந்து விழுந்தன
கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. மேலும் தேவர்சோலை, மண்வயல், பார்வுட் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால் கூடலூர் நகர பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் சூறைக்காற்றில் தேவர்சோலை அருகே ஒற்றவயல், குற்றிமூற்றி, மச்சிக்கொல்லி உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் சரிந்து விழுந்தன. இதில் சுமார் 2 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதனிடையே பலத்த சூறாவளி காற்றில் ஒற்றவயல் பகுதியில் காய்ந்த நிலையில் நின்றிருந்த ராட்சத ரோஸ்வுட் மரம் சரிந்து விழுந்தது. மலும் விழுந்த வேகத்தில் அந்த மரத்தின் கிளை பட்டு அதே பகுதியை சேர்ந்த அலவிகுட்டி என்பவரின் வீட்டு மேற்கூரை சேதம் அடைந்தது. மேலும் ஒற்றவயல்– கூடலூர் செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தை அறுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதேபோல் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி பார்வுட், பெரியசோலை, எல்லமலை உள்ளிட்ட பகுதியிலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமப்புறங்கள் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் மின்சாரம் துண்டித்த பகுதியில் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது: பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
தொடர் மழையால் கிரீன்பீல்டு உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. குறிப்பாக கிரீன் பீல்டு பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் புகுந்ததால் பொதுமக்ககள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். வீட்டிற்குள் புகுந்த மழைநீரை மோட்டார் பம்புகளை கொண்டு பொதுமக்களே இறைத்து வெளியேற்றினர்.
இந்த நிலையில் நேற்று காலையும் பாதாள சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புக தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் 2 நாட்களாக வீடுகளுக்குள் கழிவு நீர் வருகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறினர். இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து வந்து கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் மழைநீரில் அடித்து வரப்பட்ட குப்பைகளையும் அகற்றினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.