வாடகை வீட்டில் கல்விச்சேவை

ஏழைத் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்புக்காக பள்ளி ஒன்றை ஆரம்பித்து 30 ஆண்டுகளாக கல்வி பணியில் தன்னை இணைத்து கொண்டிருக்கிறார், அஜிதா டாப்போ என்ற பெண்மணி.

Update: 2017-04-30 10:24 GMT
ழைத் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்புக்காக பள்ளி ஒன்றை ஆரம்பித்து 30 ஆண்டுகளாக கல்வி பணியில் தன்னை இணைத்து கொண்டிருக்கிறார், அஜிதா டாப்போ என்ற பெண்மணி. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தான் குடியிருந்த வாடகை வீட்டில்தான் இவருடைய கல்வி சேவை தொடங்கி இருக்கிறது. அதற்கு காரணம் இவர் வசித்த பகுதிக்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. இன்றும் அதே நிலை நீடித்து கொண்டிருப்பதுதான் சோகம்.

1988-ம் ஆண்டு அஜிதா, குடியிருந்த வீட்டில் கல்வி சேவையை தொடங்க அவருடைய குழந்தையின் படிப்பும் மற்றொரு காரணம். அஜிதா மேற்கு வங்காள மாநிலம் தெற்கு கொல்கத்தா விலுள்ள அலிபோர் பகுதியை சேர்ந்தவர். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அஜிதா மேலும் பயில ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவருடைய குடும்பத்தினரோ உடனே திருமணம் செய்து வைத்து விட்டனர். கொல்கத்தாவின் வட பகுதியில் உள்ள நாக்ரகட்டா என்ற கிராமத்தில் திருமண வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அந்த பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை என்பதை அறிந்தவர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். அங்கு வசிக்கும் மலை வாழ் மக்கள் குறைந்த ஊதியத்திலேயே வாழ்க்கையை நகர்த்துபவர்களாக இருந்ததால் தங்களுடைய குழந்தைகளை நெடுந்தொலைவில் இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்று படிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கிறார்கள்.

அஜிதாவுக்கு குழந்தை பிறந்ததும், அதனை எப்படி படிக்க வைப்பது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார். தனது குழந்தைக்கு மட்டுமின்றி அங்கு வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கி இருக்கிறார். ஆனால் அங்கு வசிப்பவர்களோ தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு தயங்கி இருக்கிறார்கள். அவர்களுடைய பொருளாதாரமும் அதற்கு இடம் கொடுக்காததால் இலவசமாகவே கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

அவருடைய கல்வி முயற்சிக்கு காலதாமதமாகத்தான் கிராம மக்களின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கிறது. காலப்போக்கில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆனால் அதற்கேற்ப வீட்டில் இடவசதி இல்லை. இதையடுத்து ஐந்து இடங்களுக்கு வகுப்பை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனாலும் போதுமான இடவசதி இன்றியும், வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறார். பின்னர் ஊர் மக்களை அழைத்து குழந்தைகளின் படிப்புக்காக தொடக்க பள்ளி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர்கள் சம்மதம் தெரிவித்தாலும் பள்ளி கட்டுவதற்கு அவர் களின் பொருளாதார வசதி இடம் கொடுக்கவில்லை. வாடகை வீட்டிலும் பள்ளியை தொடர்ந்து நடத்துவதற்கு குழந்தைகளிடம் கல்வி கட்டணம் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஒவ்வொருவரிடமும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்க தொடங்கி இருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்க, வாடகைக் கட்டிடத்தில் இடப்பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குழந்தைகளின் படிப்புக்காக அஜிதா படும் சிரமங்களை பார்த்து மனம் நெகிழ்ந்த அந்த பகுதியை சேர்ந்த பெரியவர் ஒருவர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தன்னுடைய இடத்தை தானமாக கொடுத்திருக்கிறார். ஆனாலும் அதில் பள்ளிக்கூடம் கட்ட நிதி வசதி இல்லாமல் தடுமாறி இருக்கிறார். ஓராண்டுக்கு பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பள்ளிக்கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டார். ஒருசில தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வருகிறது.

தற்போது அஜிதா நிர்வகிக்கும் பள்ளிக்கூடத்தில் 130 பேர் படிக்கிறார்கள். அவருடைய மகள் ஜெயா மற்றும் 5 பேர் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறார்கள். தற்போதும் பள்ளிக்கூடத்தில் போதிய வசதி இல்லாத நிலையே நீடிக்கிறது. மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரே ஒரு கழிப்பறைதான் இருக்கிறது. அஜிதா தன்னுடைய 30 வருட உழைப்பில் உதயமாகியிருக்கும் பள்ளிக்கூடத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார். இணையதளங்கள் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

“மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு தனித்தனி கழி வறைகள் கட்ட வேண்டும் என்பது எங்கள் முதல் இலக்கு. ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க முடியவில்லை. ஆனாலும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்று கிறார்கள். நிறைய மாணவர்கள் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நடந்தே பள்ளிக்கு வந்து கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்காக பள்ளி வாகனம் ஒன்று வாங்க வேண்டும். அதற்காக நிதி திரட்டி கொண்டிருக்கிறேன்” என்கிறார், அஜிதா. 

மேலும் செய்திகள்