கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முயற்சி: செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.96.90 லட்சம் பறிமுதல் 7 பேர் கைது

பெங்களூருவில் கமி‌ஷன் அடிப்படையில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.96.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் கார்களுடன் வந்த மர்மநபர்கள் செல்லாத 500,

Update: 2017-04-29 20:30 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் கமி‌ஷன் அடிப்படையில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.96.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

7 பேர் கைது

பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் கார்களுடன் வந்த மர்மநபர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முயற்சிப்பதாக கப்பன் பார்க் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக 2 கார்களில் நின்ற 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து, கார்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சமீபத்தில் ரத்து செய்யப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரூ.96.90 லட்சம் பறிமுதல்

விசாரணையில், கைதானவர்கள் பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்த சிவபிரசாத், பசவேஸ்வரா நகரில் வசித்து வரும் சிவலிங்கப்பா, எசருகட்டாவை சேர்ந்த ரவிக்குமார், துமகூருவை சேர்ந்த மஞ்சுநாத், கேரளாவை சேர்ந்த அப்துல் ரகுமான், பிரதீப் மற்றும் பசவராஜூ என்பதும், அவர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முயன்றதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.96.90 லட்சம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்